கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே! எனக் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பகவத் கீதையை அடிக்கோடிட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
அப்போது, மாணவர்களிடையே உரையாற்றிய அவர், மனந்தளராத, அர்ப்பணிப்புமிக்க மற்றும் கடினமாக உழைப்பவர்களை, விருதுகள் தாமாகத் தேடி வரும் என உற்சாகப்படுத்தினார்.
மேலும், விழித்தெழுங்கள், எழுங்கள், இலக்கை அடையும் வரை நிறுத்தாதீர்கள் என்ற விவேகானந்தரின் பொன் வாக்கியங்களை மேற்கோள் காட்டிய துணை ஜனாதிபதி, கல்லூரியில் பெற்ற அறிவை பயன்படுத்தி, தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாணவர்கள் செல்போன் பழக்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், தங்களை விட வயதில் மூத்தவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை எப்போதும் மதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
















