டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடி விபத்து காரணமாக, தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவுவாயில் எண். 1 அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த I 20 கார், நேற்று மாலை 6.55 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதனால் அருகிலிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததுடன், இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹரியானாவில் மூன்று டன் வெடி மருந்துகளுடன், 7 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இது பயங்கரவாதிகளின் சதிச்செயலா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த துணைத் தலைமை தீயணைப்பு அதிகாரி ஏ.கே. மாலிக், வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் பற்றி எரிந்த தீயை 34 நிமிடங்களில் தீயணைப்புப் படையினர் கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். இனி இதுபோன்ற விபத்துகள் நடக்கக் கூடாது என்று கடவுளை வேண்டுவதாகவும், டெல்லி தீயணைப்புத் துறை எப்போதும் தயாராகவே உள்ளதாகவும் கூறினார்.
===
















