நாட்டையே உலுக்கியுள்ள கார் வெடிப்பு சம்பவத்தில், அம்மோனியம் நைட்ரேட், எரிபொருள் எண்ணெய் மற்றும் டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அம்மோனியம் நைட்ரேட் எவ்வாறு கார் வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை பற்றித் தற்போது பார்க்கலாம்.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்புச் சம்பவம் அப்பகுதியையே பதற்றத்தில் உறைய வைத்துள்ளது. கார் வெடிப்பு சம்பவத்திற்கு எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், அதற்கான காரணத்தைக் கண்டறிய அங்குலம், அங்குலமாக விசாரணை அமைப்புகள் புலனாய்வு செய்து வருகின்றன. முதற்கட்டமாகக் கார் வெடிப்பு சம்பவத்திற்கு அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் மற்றும் வெடிக்கும் டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அது என்ன அம்மோனியம் நைட்ரேட்? அது என்ன அவ்வளவு பயங்கரமான ரசாயனமா என்று கேட்பவர்கள், தற்போது நடந்த கார் வெடிப்பில் அதன் வீரியத்தை உணர்ந்திருப்பார்கள். அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் பொதுவாகத் தொழிற்சாலைகள், சுரங்கம், கட்டுமானத் துறைகளில் வெடிமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
அம்மோனியம் நைட்ரேட் சாதாரண நிலையில் வெடிக்காது, அதே நேரத்தில் பெட்ரோலியம் அடிப்படையிலான எரிபொருளுடன் இணைந்த நிலையில், டெட்டனேட்டர்கள் மூலம் தூண்டப்படும்போது வேதிவினை நிகழ்ந்து, அது பயங்கரமான வெடிக்கும் பொருளாக மாறுகிறது. Ammonium-Nitrate Fuel-Oil பொதுவாக 94 சதவிகிதம் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் 6 சதவிகிதம் எரிபொருள் எண்ணெயைக் கொண்டுள்ளது.
அம்மோனியம் நைட்ரேட் ஆக்ஸிஜனேற்றியாகவும், எரிபொருள் எண்ணெய் எரியக்கூடிய ஊக்கியாகவும் செயல்படுகிறது… அம்மோனியம் நைட்ரேட், Ammonium-Nitrate Fuel-Oil-ஆக இருக்கும்போது, சாதாரணமாக அதனை வெடிக்க முடியாது, அதற்கென்று ஒரு ஆற்றல், தூண்டுதல் தேவைப்படுகிறது. அந்தப் பணியைத்தான் டெட்டனேட்டர்கள் அல்லது வெடிபொருட்கள் செய்கின்றன.. டெட்டனேட்டர்களால் தூண்டப்படும்போது, நைட்ரஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நீராவி என ஒரு நொடியில் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு, பயங்கரமாக வெடிப்பதோடு, கார்பன்-மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களையும் வெளியேற்றுகிறது.
இதனால்தான் அதன் வீரியம் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. ANFO எனப்படும் Ammonium-Nitrate Fuel-Oil-ல் எளி கிடைக்கும் தன்மை, குறைந்த விலை மற்றும் செயல்திறன் ஆகியவை பயங்கரமான குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான செயல்முறையை எளிதாக்கிவிடுகின்றன… கையாளும் தன்மை, சேமிப்பு, பாதுகாப்பு எனப் பல்வேறு அடுக்குகளில் வெடிக்கக்கூடிய அபாயத்தைக் குறைக்கிறது.
முதற்கட்ட விசாரணையில் டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் தற்கொலைப்படை பயங்கரவாத தாக்குதலோடு ஒத்துப்போகிறது. இந்தியாவில், 45% க்கும் அதிகமான அம்மோனியம்-நைட்ரேட்டைக் கொண்ட எந்தவொரு கலவையையும் வெடிபொருளாக வகைப்படுத்தும் சட்டங்களின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
இந்த ஒழுங்குமுறை கட்டமைப்பு, சுரங்கம் மற்றும் கட்டுமானம் போன்ற தொழில்களில் அதன் சட்டப்பூர்வ பயன்பாட்டை அனுமதிக்கும் அதே வேளையில், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டெல்லியில் நடந்த கார் வெடிப்பு, அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய், டெட்டனேட்டர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதையும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
















