கடந்த வாரம் டெல்லி விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி இந்திர காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானிகளுக்கு கிடைத்த ஜிபிஎஸ் தகவல்கள் வான்வழியை தவறாக காட்டியதால் குழப்பம் ஏற்பட்டது.
விமானத்தின் நிலை, நிலப்பரப்பு குறித்த எச்சரிக்கை தகவல்கள் வழக்கத்திற்கு மாறாக இருந்ததாகவும், டெல்லியில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை வான்வழியை குழப்பமாக மாற்றி காட்டும் ஜிபிஎஸ் தகவல்களே கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜிபிஎஸ் தரவுகளில் ஏற்பட்ட இந்த குளறுபடியால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் பெரும் இடையூறுகள் ஏற்பட்டது.
இதனிடையே, டெல்லி விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சைபர் தாக்குதலா அல்லது நம் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகளை ஹைஜாக் செய்வதற்கான சதியா என பல்வேறு கோணங்களில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்ட குழு விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான செயற்கைக்கோள் சிக்னல்களை உருவாக்கி, விமான நேவிகேஷன் முறைகளை திசை திருப்பும் நவீன சைபர் தாக்குதலா என கண்டறிய தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பின் உதவியை நாடியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
















