பாகிஸ்தானில் 27-வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷலாக உள்ள அசீம் முனீரின் பதவிக்காலம் வரும் 27-ம் தேதியுடன் காலாவதியாகும் நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில், அந்நாட்டின் 27-வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட திருத்தத்தின் மூலம் ராணுவ தளபதியே, முப்படைகளின் தலைமை தளபதியாக இருப்பார். ராணுவ தளபதியே, பிரதமருடன் ஆலோசனை நடத்தி அனைத்து படைப் பிரிவுகளுக்கான தளபதிகளையும் நியமிப்பார்.
புதிய சட்டத்திருத்தம் பீல்டு மார்ஷல் என்ற அந்தஸ்தை அளிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பீல்டு மார்ஷல் அந்தஸ்து எப்போதும் காலாவதியாகாது எனவும், அந்த அந்தஸ்தை பெற்றவர் ஆயுள் முழுதும் அதிகாரத்தில் இருப்பார் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அணு ஆயுதம் மற்றும் அணு ஏவுகணை கட்டுப்பாடு முப்படை தலைமை தளபதியிடமே இருக்கும். அரசியலமைப்பு சட்டம் தொடர்பான விஷயங்களை கவனிக்க தனி நீதிமன்றம் உருவாக்கப்படும். உச்சநீதிமன்றம் வழக்கமான சிவில் மற்றும் குற்ற வழக்குகளை மட்டுமே கவனிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
















