பள்ளிப்பாளையம் கிட்னித் திருட்டு வழக்கில் இடைத்தரகர்கள் இருவரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்களும், பிரபல மருத்துவமனைகளின் பெயர்களும் அடிபட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, வறுமையில் வாடும் நெசவாளர்களை குறிவைத்து, கிட்னி திருட்டுக்கு ஆட்களைச் சேர்த்த இடைத்தரகர்களான திராவிட ஆனந்தன் மற்றும் ஸ்டாலின் மோகன் என்பவரைச் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் ஐந்து நாட்கள் அனுமதி வழங்கியதை அடுத்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவலில் எடுத்து இரண்டு நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள மூன்று நாட்களில் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
















