நாமக்கல்லில் வாங்கிய கடனை, கிட்னியை விற்று அடைக்குமாறு நிர்பந்தித்ததால் மன உளைச்சலில் புகைப்பட கலைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிபாளையம் அடுத்த ஐந்துபனை பகுதியில் நந்தகோபால் என்பவர் வசித்து வந்தார். புகைப்பட கலைஞரான இவர், தனது நண்பர்களான தினேஷ் மற்றும் ஹரியுடன் இணைந்து குறும்படம் தயாரித்து வந்துள்ளார். இதற்காக அவர்களிடமே நந்தகோபால் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இந்தக் கடன் தொகையைக் கேட்டு நண்பர்கள் இருவரும் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கடன் தொகையைக் கிட்னியை விற்றாவது அடைக்குமாறு அவர்கள் நந்தகோபாலை நிர்பந்தித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த நந்தகோபால் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்து கொண்டார். தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
















