வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் அமர்ந்து BLO அதிகாரிகள் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ததால் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 43வது வார்டு பகுதியில் உள்ள 99, 100, 101,102 ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களை 43வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஆயூப்கான், தனது இல்லத்திலேயே அமர வைத்து எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்து அப்பகுதிக்கு வந்த அதிமுகவினர் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரிடம், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வீடு வீடாக சென்று திரும்ப பெறாமல், ஒரே இடத்தில் திரும்ப பெறுவதால் மீண்டும் வாக்காளர் பட்டியிலில் குளறுபடிகள் ஏற்படும் நிலை உருவாகும் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பி.எல்.ஓ.க்கள் பதில் அளிக்காத நிலையில், ஆயூப்கான் இது தங்கள் பகுதி என்றும், வாக்காளர்களை தாங்களே சரிபார்த்துக் கொள்வதாகவும் கூறியதால் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளறுபடிகள் நடைபெறுவதாக பலமுறை புகார் அளித்தும் தொடர்ந்து இதே நிலை நீடிப்பதாகவும் அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர்.
















