இரண்டரை கோடி ரூபாய் பணமோசடி புகாரில் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதியும், திருப்போரூரைச் சேர்ந்த தனசேகர் என்பவரும் 20 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனசேகரன் மற்றும் அவர்களது உறவினர்களிடம் இருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை கலாநிதி பெற்றதாக சொல்லப்படுகிறது. பணம் பெற்ற கலாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின் வெளிநாடு சென்றதால், அவர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் தனசேகரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது தனது சொத்து ஆவணங்களை தனசேகரனிடம் ஒப்படைப்பதாக கூறிய கலாநிதி, சொத்து ஆவணங்கள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும், தமக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி வழங்கவில்லை எனக்கூறி தனசேகரன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மற்றும் அவரது மனைவி மீது மோசடி குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனடிப்படையில், கலாநிதி மற்றும் அவரது மனைவி மீது மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















