வாடிப்பட்டி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், அறுவடை காலம் என்பதால் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 10 நாட்களாக நெல்மணிகளை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் தாமதப்படுத்தி வருவதாகவும், அதிகாரிகளின் மெத்தனத்தால் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேவையான சாக்கு பைகள் இல்லாததால் நெல்மணிகளை குவித்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அதிக பணம் கொடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் நெல்மணிகளை உலர்த்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மழையால் சேதமடைந்த நெல்மணிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அறுவடை செய்யப்பட்ட ஓரிரு நாளில் நெல்மணிகளை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















