ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்தும், தனது குடும்பத்தில் இருந்தும் விலகுவதாக லாலு பிரசாத் யாதவின் மகள் அறிவித்துள்ளார். இதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
அண்மையில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தல், ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு பலத்த அடியைக் கொடுத்தது. இதில் இருந்து லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் இருவரும் மீண்டு வருவதற்குள், அவர்களது குடும்பத்திற்குள் தற்போது புதிய பிரளயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம்தான், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், எம்எல்ஏவுமான தேஜ் பிரதாப் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பொது நடத்தை மற்றும் பொறுப்பற்ற செயல்கள் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய தேஜ் பிரதாப் யாதவ், சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை எதிர்த்தே போட்டியிட்டார். தேஜ் பிரதாப் யாதவை தொடர்ந்து, அவரது சகோதரியான ரோகிணி ஆச்சாரியாவும் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அரசியலில் இருந்தும், லாலு பிரசாத் யாதவ்வின் குடும்பத்தில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தனது சகோதரர் தேஜ் பிரதாப் நீக்கப்பட்டது முதலே ரோஹினி ஆச்சாரியா அதிருப்தியில் இருந்து வந்தார். அதன் வெளிப்பாடாகக் கட்சி தலைவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் சமூக ஊடகங்களில் அன்ஃபாலோ செய்தார். அதன் நீட்சியாகத் தற்போது தனது விலகல் முடிவை அவர் அறிவித்துள்ளார். அவரது விலகலை காட்டிலும், விலகலுக்கு அவர் தெரிவித்த காரணங்கள்தான் தற்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளன. இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு திருமணமான பெண், ஒரு தாய் அவமானப்படுத்தப்பட்டதாகவும், கடுமையான சொற்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னை அடிக்க முயற்சித்ததாகவும் ரோகிணி ஆச்சாரியா குற்றம்சாட்டியுள்ளார். அழுதுகொண்டே தனது பெற்றோரையும் சகோதரிகளையும் விட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், தனது தாய் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். தான் அனாதையாக மாற்றப்பட்டதாகக் கூறியுள்ள ரோகிணி ஆச்சாரியா, நீங்கள் யாரும் என் வழியைப் பின்பற்றக் கூடாது.
எந்த வீட்டிலும் என்னை போன்ற மகளோ, சகோதரியோ இருக்கக் கூடாது எனவும் பதிவிட்டுள்ளார். 2022ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவிற்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டபோது, ரோகிணி ஆச்சாரியாதான் தனது சீறுநீரகத்தை வழங்கித் தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றியிருந்தார். ஆனால், அது குறித்தும் தான் விமர்சிக்கப்படுவதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார். இது பற்றிப் பதிவிட்டுள்ள அவர், உங்களது வீட்டில் ஒரு சகோதரர் இருக்கும்பட்சத்தில், தவறுதலாகக் கூட உங்கள் தந்தையை காப்பாற்ற வேண்டாம் எனத் திருமணமான பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அனைத்து பெண்களும், தங்கள் குடும்பத்திற்கு இணையாகத் தங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் எனவும் ரோகிணி ஆச்சாரியா தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். சிறுநீரகத்தை வழங்கிப் பெரிய குற்றத்தைச் செய்துவிட்டதாகவும், இது குறித்து தனது கணவர் மற்றும் மாமியாரிடம் கூட அனுமதி பெறவில்லை எனவும் அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது தனது குடும்பத்தாலேயே, தான் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை போன்று யாரும் தவறு செய்துவிட வேண்டாம். ரோஹிணியை போன்ற ஒரு மகள் யாருக்கும் இருக்கக் கூடாது எனவும் அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு ரோஹிணி ஆச்சாரியாதான் காரணம் எனத் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியதாகவும், காலணியை தூக்கி வீசி கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும கூறப்படுகிறது. இதனையடுத்தே ரோஹிணி ஆச்சாரியா இந்த விலகல் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜ் பிரதாப் யாதவ், தனது சகோதரி எதிர்கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு பிறகு இனியும் அமைதியாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தனக்கு நிகழ்ந்ததை பொறுத்துக்கொண்டேன். ஆனால் என் சகோதரிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது எனத் தேஜ் பிரதாப் யாதவ் ஆவேசத்துடன் கூறியுள்ளார். லால் பிரசாத் யாதவ் தலையசைத்தால் போதும், இந்த துரோகிகளை பீகார் மக்களே புதை்துவிடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு குடும்பத்தின் மரியாதை, ஒரு மகளின் கண்ணியம் மற்றும் பீகாரின் சுயமரியாதை தொடர்பானது எனவும் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளார். ரோஹிணி ஆச்சாரியாவின் விலகலும், அதன் தொடர்ச்சியான சம்பவங்களும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், குடும்ப ரீதியிலும் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது.
















