திருப்பூர் அடுத்த இடுவாய் கிராமத்தில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், பல்வேறு வார்டுகளில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது.
இதற்கு சுற்றுப்புரத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இடுவாய் அடுத்த சின்ன காளிபாளையம் கிராமத்தில் குப்பைகளை கொட்ட முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சின்ன காளிபாளையம் கிராமத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது எனக் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் குப்பைகளை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
700க்கும் மேற்பட்டோர் இணைந்து போராட்டம் நடத்தியதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
















