துபாய் விமான சாகசத்தின்போது விபத்து ஏற்பட்டு பலியான போர் விமானியின் உடல் அரசு மரியாதைக்கு பின் சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
துபாயில் கடந்த 21ம் தேதி சர்வதேச விமானக் கண்காட்சியில் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சூலூா் விமானப்படை தளத்தை சேர்ந்த ‘தேஜாஸ்’ என்ற போர் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் நமன்ஸ் சியால் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் சூலூர் விமானப்படை தளத்தில் அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது.
போர் விமானி நமன் சியால் உடலுக்கு விமானப் படையின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, விங் கமாண்டர் நமன்ஸ் உடல் சொந்த ஊரான இமாச்சல பிரதேசம் காங்க்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
















