தஞ்சையில் பெய்த தொடர் மழை காரணமாக 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 25 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வடிகால்வாய்களை முறையாகத் தூர்வாராததால் மழைநீர் விளைநிலங்களை சூழ்ந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வேளாண் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில் இது போன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க வடிகால்வாய்களை முறையாகத் தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
















