திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 688 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒன்பது நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பத்தாம் நாளான நேற்று அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு ஐந்து மடக்குகளில் நெய் நிரப்பி பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் ஆண்டுக்கு ஒரு முறை சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், ஆனந்த தாண்டவம் ஆடியபடி மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
















