மத்திய அரசின் புதிய விதிகளை அமல்படுத்த முடியாமல் இண்டிகோ விமான நிறுவனம், தடுமாறி வருகிறது. அதற்கு என்ன காரணம் என்பதை இப்போது பார்க்கலாம்…
விமானிகளின் சோர்வை போக்க நவம்பர் ஒனறாம் தேதி முதல், திருத்தப்பட்ட பணி நேர கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு கொண்டுவந்தது.
அதன்படி விமானிக்கும், விமான பணியாளர்களுக்கும் வாரம் 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு விமானி தொடர்ச்சியாக 18 மணி நேரம் வரை விமானத்தை இயக்கலாம் என்ற விதி, தற்போது 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்த விதிகளை அமல்படுத்த இண்டிகோ நிறுவனத்திடம் போதுமான அளவில் விமானிகள், பணியாளர்கள் இல்லையென கூறப்படுகிறது.
இதனால் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் அந்த நிறுவனத்தின் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதன்காரணமாக மற்ற நிறுவனங்கள், தங்களின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தின. இந்தநிலையில் பயணிகளின் நலன் கருதி, விமானிகளின் பணி நேர விதிகளை மத்திய அரசு தளர்த்தியது.
அதன்படி இண்டிகோ நிறுவனம், தனது செயல்பாடுகளை மீண்டும் நிலைநிறுத்தக் கால அவகாசம் வழங்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குழப்பத்திற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய மத்திய அரசு உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனிடைய விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விமானப் பணியாளர்களை நியமிப்பது குறித்த விரிவான செயல் திட்டத்தை இண்டிகோ நிறுவனம் உடனடியாகச் சமர்ப்பிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.
மேலும் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான முழு பணத்தையும் பயணிகளுக்குத் திரும்ப அளிக்குமாறு இண்டிகோவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
















