அமெரிக்காவின் தடையை மீறிச் சட்டவிரோதமாக வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற ஒரு பெரிய கப்பலை வெனிசுலா கடற்கரையில், அமெரிக்கப் படை பறிமுதல் செய்தது.
வெனிசுலா கடற்கரையில் இருந்து புறப்பட்ட எண்ணெய் கப்பலைக் கைப்பற்றியது. இது தனது உண்மையான இருப்பிடத்தை மறைக்க தவறான நிலைத் தரவுகளை ஒளிபரப்பியதாகக் கூறப்படுகிறது. முன்னதாகக் கப்பலின் டிரான்ஸ்பாண்டர், அது கயானா மற்றும் சுரினாம் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் நங்கூரமிட்டு இருப்பதாகக் காட்டியுள்ளது.
ஆனால் இந்தக் கப்பலின் உண்மைத் தன்மை குறித்து அமெரிக்காவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் செயற்கைக்கோளை பயன்படுத்தி, கப்பல் எங்கே இருக்கிறது என்று பார்த்தபோது அவர்களுக்கு உண்மை விளங்கியது.
அக்டோபர் இறுதி முதல் டிசம்பர் 4 வரை, அந்தக் கப்பல் உண்மையில் வெனிசுலா கடற்கரையில் உள்ள ஜோஸ் எண்ணெய் முனையம் அருகில் நங்கூரமிட்டுள்ளது என்று கண்டறியப்பட்டது. இந்தக் கப்பலில் 1 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை ஏற்றியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தக் கப்பல் ஈரானுக்கும் வெனிசுலாவுக்கும் பலமுறை பயணங்களை மேற்கொண்டுள்ளது. சீனா, ஈரான் போன்ற நாடுகளுக்குப் பல லட்சக்கணக்கான பேரல்கள் எண்ணெயை இந்தக் கப்பல் கொண்டு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே, உடனடியாக அந்தக் கப்பல் இருக்கும் பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற அமெரிக்கப் படைகள், கப்பலை பறிமுதல் செய்தனர்.
















