ஐந்து ஆண்டுகளுக்கு முன் சண்டிகரில் நடந்த ஒரு கொலை வழக்கில், புதிய திருப்பமாகக் கணவரே மனைவியைக் கொன்றது என்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையின் மர்மத்தை அவிழ்ப்பதில் மூளை மின் அலைவு கையொப்பம் சோதனை முக்கியப் பங்கு வகித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பள்ளியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் மூத்த பேராசிரியர் பி.பி. கோயல், தனது மனைவி சீமா கோயல் மற்றும் ஒரே மகள் பாருல் ஆகியோருடன் சண்டிகரில் வசித்து வந்தார். 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, தீபாவளி பண்டிகை அன்று, கோயலின் மனைவி சீமா கோயல் பஞ்சாப் பல்கலைக்கழக குடியிருப்பில் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கை கால்கள் கட்டப் பட்ட நிலையில் கிடந்த சீமாவின் கழுத்தை நெரித்ததற்கான அடையாளங்கள் இருந்தன. வாசல் கதவுகளை உடைத்துவிட்டு யாரும் வீட்டுக்குள் நுழைந்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை.
மாறாகப் பிரதான வாசல் கதவு வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தது. படுக்கையறை மற்றும் சமையலறை ஜன்னல்களில் இருந்த வலைத் தடுப்புகள் அனைத்தும் உள்ளிருந்து வெட்டப்பட்டிருந்தன. எந்த விலையுர்ந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
காணாமல் போயிருந்த சீமாவின் மொபைல் போனில் அழைப்புப் பதிவுகள் எல்லாம், மொபைல் போன் குடியிருப்பு வளாகத்தை விட்டு வெளியே செல்லவில்லை என்பதைக் காட்டின. இவை எல்லாம் சீமாவின் மரணத்தின் மர்மத்தை மேலும் அதிகரித்தன. இதற்கிடையே, சீமா கோயல் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதால் இறந்தார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது.
தீபாவளிக்கு முந்தைய நாள் மேல்தளத்தில் உறங்கியதாகவும், காலையில் பால்காரர் எழுப்பியபோது, கீழே வந்து பார்த்தபோதுதான் மனைவி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகப் பேராசிரியர் பிபி கோயல் காவல்துறையினரிடம் முதலில் தெரிவித்திருந்தார். ஆனால், வீட்டுக்குள் இருந்த நபரே இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகத்தை எழுப்பிய சீமாவின் சகோதர், இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்துமாறு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். காவல்துறையினர் வருவதற்குள் சீமாவின் உடலை பேராசிரியர் பிபி கோயல் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகவும் முக்கிய தடயங்களை அழித்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. பேராசிரியர் பிபி கோயல் கொடுத்த வாக்குமூலங்களில் நிறைய முரண்பாடுகள் இருந்ததும் அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்தன.
2021ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி, பேராசிரியர் பிபி கோயலிடம் இருந்து உண்மையான வாக்குமூலங்களைப் பெறுவதற்காக Narco Analysis சோதனைக்குக் காவல்துறை அனுமதி கேட்டது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அவருக்கு ஆஸ்துமா உள்ளதால் மருத்துவ ரீதியாக Narco Analysis சோதனைக்குத் தகுதியற்றவர் என்று குஜராத்தில் உள்ள ஒரு தடயவியல் ஆய்வகம் அறிக்கை அளித்தது. பல தடைகளுக்குப் பிறகு, கோயலுக்கும் அவரது மகள் பாருலுக்கும் பாலிடெகிராஃப் சோதனைகள் செய்யப் பட்டன.
அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் பாருலுக்கு உளவியல் மதிப்பீட்டு சோதனை செய்யப் பட்டது. தொடர்ந்து, பேராசிரியர் கோயலுக்கு கடந்த ஜூலை மாதம் அதிநவீன தடயவியல் சோதனை முறையான மூளை மின் அலைவு கையொப்பம் சோதனை செய்யப் பட்டது. இது மூளை கைரேகை சோதனை என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நரம்பியல்-உளவியல் விசாரணை முறையாகும்.
இதில் குற்றம் சாட்டப்பட்டவரின் மூளையின் எதிர்வினையைப் பதிவு செய்வதன் மூலம் குற்றத்தில் அவர்களின் பங்கேற்பு ஆராயப்படுகிறது. இந்தப் பரிசோதனையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு டஜன் கணக்கான மின்முனைகள் இணைக்கப்பட்ட தொப்பிகள் அணிவிக்கப்பட்ட பிறகு, குற்றம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கவும் ஆடியோக்கள் கேட்கவும் ஏற்பாடு செய்யப் படுகிறது. அப்போது நியூரான்களின் தூண்டுதல் காரணமாக மூளையில் எழும் அலைகள் ஆய்வு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் குற்றத்தில் அவரது பங்கேற்பு ஆய்வு செய்யப்படுகிறது. விசாரணையின் முக்கிய அம்சம் “நீ என் அம்மாவைக் கொன்றுவிட்டாய்” என்ற சொற்றொடர் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
முன்னதாக , தனது தாயின் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு வீட்டுக்குத் திரும்பியபோது, தனது மகள் தன்னிடம் கோபமாக கத்தியதாக கோயல் காவல்துறை விசாரணையில் தெரிவித்திருந்தார். அவரது வாக்குமூலம் படி, தனது சட்டைக் காலரைப் பிடித்து, “நீதான் என் அம்மாவைக் கொன்றாய்” என்று பாருல் கத்தியதாக கோயல் கூறியிருந்தார். பேராசிரியர் பிபி கோயலின் மூளை மின் அலைவு கையொப்பம் சோதனை முடிவுகளை மற்ற தடயவியல் ஆதாரங்களுடன் இணைத்து ஆய்வுசெய்த காவல் துறையினர், தனது மனைவியை அவரே கொலை செய்தது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, கடந்த டிசம்பர் 8ம் தேதி, பேராசிரியர் கோயலை காவல்துறை கைது செய்துள்ளது. தந்தை மற்றும் மகள் கொடுத்துள்ள வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகளை மேலும் தெளிவுபடுத்துவதற்காக, தந்தையின் முன்னிலையில் மகளிடம் ஒரு சுற்று விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூளை ஸ்கேன் பரிசோதனை மூலம் கொலை குற்றவாளியைக் கண்டுபிடித்த உலகின் இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத் தக்கது. ஏற்கெனவே, 2008 ஆண்டில், புனேவில் 24 வயதான அதிதி சர்மா என்ற மாணவி தனது முன்னாள் காதலன் உதித்தை விஷம் கலந்து ஸ்வீட் கொடுத்த கொன்ற வழக்கிலும் மூளை ஸ்கேன் பரிசோதனை மூலமே அதிதி சர்மா கைது செய்யப்பட்டார். இதன் மூலம் மூளை ஸ்கேன் அடிப்படையில் குற்றத்தை நிரூபித்ததில் முதல் நாடாக இந்தியா சாதனை படைத்தது.
















