அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைச்சுவை ஜாம்பவான் கார்ல் ரெய்னரின் மகனான ராப் ரெய்னர், 1971ல் நடிகராகத் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.
பின்னர் ஐந்து தசாப்தங்களாக நடிகர், இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என ஜொலித்தார். திஸ் இஸ் ஸ்பைனல் டேப், தி பிரின்சஸ் பிரைட் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
சிறந்த இயக்குநருக்கான கோல்டப் குளோப் விருதை 4 முறை வென்றுள்ளார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பிரென்ட்வுட் வீட்டில் 78 வயது மற்றும் 68 வயதுடைய தம்பதி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாகப் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர்கள் குறித்து ஆரம்பத்தில் விபரம் வெளியாகாத நிலையில், பின்னர் அது ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மிக்கேல் என்பது உறுதி செய்யப்பட்டது.
உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஹாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















