சீனாவில் மனிதர்களுக்கு இணையாக ரேப் பாடல்களுக்கு ரோபோக்கள் நடனமாடியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் ரோபோ தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. 2013ம் ஆண்டில் இருந்தே தொழில்துறை ரோபோக்களுக்கான சந்தையாகச் சீனா இருந்து வருகிறது.
4 ஆயிரத்து 500 மனிதர்களுக்கு ஒரு ரோபோ என்ற அடிப்படையில் மனிதவடிவ ரோபோக்களை உருவாக்கும் முயற்சியையும் சீன அரசு முன்னெடுத்து வருகிறது.
பாதுகாப்பு பணி உள்ளிட்ட மனிதர்களை கொண்டு செய்யப்படும் கடின வேலைகளை ரோபோக்கள் செய்யும் வகையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை சீனா அடுத்தடுத்து உருவாக்கி வருகிறது.
அந்த வகையில், தற்போது கலைத் துறையிலும் தங்களது முத்திரையை ரோபோக்கள் பதிக்கத் தொடங்கியுள்ளன. அதன்படி சீனாவின் செங்டு நகரில் அமெரிக்க வம்சாவளி பாடகர் வாங் லீஹோமின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சியில், மனிதர்களுக்கு இணையாக ரோபோக்களும் மேடையில் நடனமாடி அசத்தின. யூனிட்ரீ நிறுவனத்தின் இந்த அதிநவீன ரோபோக்கள் நிபுணத்துவம் வாய்ந்த நடனக் கலைஞர்களைப் போல மேடையில் தோன்றி நடனமாடியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ரோபோக்களின் இந்த அசாத்திய நடனத்திற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
















