பள்ளிகள் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையொட்டி, வரும் 23ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் படி சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் ஆயிரத்து 400 ரூபாயாக இருந்த நிலையில் 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் பேருந்துகளில் ஆயிரத்து 200 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மதுரைக்கு செல்லும் பேருந்துகளில் வழக்கமான நாட்களில் ஆயிரத்து 100 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல நாகை, திருச்சி, விழுப்புரம் செல்லும் பேருந்துகளின் கட்டணங்களும் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
















