முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொலைநோக்கு பார்வை கொண்ட முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் 101வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், நாட்டு மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்துள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் வாஜ்பாய் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
வாஜ்பாய் சக்தி வாய்ந்த பேச்சாளராகவும், கவிஞராகவும் எப்போதும் நினைவு கூரப்படுவார் எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, வாஜ்பாயின் ஆளுமை, பணி மற்றும் தலைமைத்துவம் நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் என கூறியுள்ளார்.
















