தைவானை சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்த சீன ராணுவம் தனது படைகளை அனுப்பியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
கிழக்காசியாவில் உள்ள தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் தனி நாடு அல்ல, அது சீனாவின் ஒரு பகுதி என்றும் தொடர்ந்து சீனா கூறி வருகிறது.
இதனை ஏற்க மறுக்கும் தைவான், தங்களுக்கெனத் தனி இறையாண்மை உள்ளதால் தாங்கள் தனி நாடு தான் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது.
இதனால் பல ஆண்டுகளாக சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. தைவான் பிரச்னையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் சீனா எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தைவானை சுற்றி கூட்டு ராணுவ பயிற்சிகளை நடத்த விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளதாகச் சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
சீனாவின் இத்தகைய அறிவிப்பால் கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
















