வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது, பெரிய பெருமாள், ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி – நரசிம்மர் கோயிலில் மூலவருக்கு சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக பக்தோசித பெருமாள், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் மதுரை தல்லாகுளத்தில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக வந்து சுவாமி வெங்கடாசலபதி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, கோவிந்தா என் பக்தி முழக்கம் எழுப்பினர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் உள்ள பரிமள ரங்கநாதர் கோயிலில் அதிகாலை ஐந்து 18 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது சுவாமி ரங்கநாதர், புஷ்ப அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன், உற்சவர் வரதராஜ பெருமாள், பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் ரங்கா, ரங்கா என விண்ணதிர பக்தி முழக்கம் எழுப்பினர்.
















