ஈரோட்டில் உள்ள பனகஹள்ளி கிராம மயானத்துக்கு வக்ஃபு வாரியம் உரிமை கொண்டாடுவதற்கு எதிரான வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பனகஹள்ளி, பாளையம் ஆகிய கிராமங்களுக்குச் சொந்தமான மயான நிலத்தை வக்ஃபு வாரியம் சொந்தம் கொண்டாடுவதாகவும், மயானத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் 200 ஆண்டுகளாகக் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் அரசுக்குச் சொந்தமான நிலத்தை திடீரென வக்ஃபு வாரியம் சொந்தம் கொண்டாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர், கோவை வக்ஃபு வாரிய கண்காணிப்பாளர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், இடைப்பட்ட காலத்தில் யாரேனும் உயிரிழந்தால், உடலை தகனம் செய்வதற்கான இடத்தை அதிகாரிகள் அடையாளம் காண வேண்டும் என்றும், பாரம்பரிய முறைப்படி உடல்கள் அடக்கம் செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
















