வேதாந்தா குழுமத்தின் 75 சதவீதத்துக்கு மேலான சொத்துக்கள் மக்களுக்கான நலப்பணிகளுக்கு வழங்கப்படும் என அந்த குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கனிமம் மற்றும் சுரங்கம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வரும் வேதாந்தா குழுமம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. தமிழகத்தின் துாத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகித்து வந்த அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ், அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.
நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அக்னிவேஷ், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், தன் பிள்ளைக்கு விடை கொடுக்க வேண்டிய பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும், மகனின் இழப்பு குடும்பத்தினரை நொறுக்கிவிட்டது எனவும் கூறியுள்ளார்.
வேதாந்தா குழுமத்தின் வருமானத்தில் 75 சதவீதத்தை சமூகத்துக்கு திருப்பி தருவதாக மகனிடம் உறுதி அளித்திருந்ததாக கூறியுள்ள அவர், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற உறுதி எடுத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
















