சென்னை புத்தக காட்சியில் திராவிட இயக்க வரலாற்று புரட்டுகள் புத்தகத்தின் விளம்பரத்தை மறைக்க முயன்ற நபரை தமிழ் ஜனம் செய்தி குழுவினர் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர்.
எழுத்தாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான மா.வெங்கடேசன் ‘திராவிட இயக்க வரலாற்று புரட்டுக்கள்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் சென்னையில் நடைபெற்று வரும் புத்தக காட்சியில், இடம்பெற்றுள்ள நிலையில் அதற்கு வாசகர்களிடை நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் அந்த புத்தகத்திற்கு வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தை மறைக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
இது குறித்து செய்தி சேகரிக்க தமிழ் ஜனம் செய்தி குழுவினர் அங்கு சென்றிருந்தனர். அப்போது செய்தியாளர்கள் கண் முன்னே, புத்தகத்தின் விளம்பரத்தை மறைக்கும் வகையில்,ஒருவர் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றார்.
அவரை தடுத்த தமிழ் ஜனம் செய்தியாளர் குழு, ஏன் விளம்பரத்தை மறைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஸ்டிக்கர் ஒட்டச் சொல்லி தனக்கு சிலர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து ஸ்டிக்கர் ஒட்டச்சொன்னது யார்? என்று கேட்டதற்கு அந்த நபர் முறையாக பதில் அளிக்காமல் அங்கிருந்து நழுவி சென்றார். இதேபோல் ஏற்கனவே முதல்வர் வருகையின் போதும் புத்தகத்தின் விளம்பரத்தை மறைத்து வைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
















