அமிர்தசரஸ் பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் கால் கழுவி வாயை கொப்பளித்து துப்பிய விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில் தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயில் சீக்கியர்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோயிலில் உள்ள அமிர்த சரோவர் புனிதக் குளத்தில் சீக்கியர்கள் புனித நீராடி வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் பொற்கோயிலுக்கு வந்த சுபான் ரங்ரீஸ் என்ற இஸ்லாமிய இளைஞர் புனித குளத்தில் அமர்ந்து கால்களை கழுவி உள்ளார். மேலும் குளத்து நீரில் வாய் கொப்பளித்து அங்கேயே துப்பியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த செயல் சீக்கிய மத மரபுகளை மீறுவதாக அமைந்ததாக பலரும் கண்டம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து அந்த இளைஞர் மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தான் நீண்ட நாட்களாகப் பொற்கோவிலுக்குச் செல்ல விரும்பியதாகவும் ஆனால் அங்குள்ள மத வழிமுறைகள் தனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தான் இஸ்லாமிய முறைப்படி செய்வதாக நினைத்துச் செய்ததாகவும் சீக்கியர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
















