வங்கதேசத்தை முகமுது யூனுஸ் சீரழித்துவிட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்தாண்டு வெடித்த போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில் பிப்ரவரி 12ம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கருத்து தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா, முகமது யூனுஸை மக்களின் விரோதி, பண மோசடி செய்பவர், அதிகாரப் பசி கொண்ட துரோகி என கடுமையாக விமர்சித்துள்ளார்.
வங்கதேசம் பாதாளத்தின் விளிம்பில் நிற்பதாகவும், விடுதலைப் போரின் மூலம் வென்றெடுக்கப்பட்ட தாய்நாடு, தீவிரவாத வகுப்புவாத சக்திகள் மற்றும் வெளிநாட்டு சதிகாரர்களின் கோரத் தாக்குதலால் சீரழிக்கப்பட்டு வருவதாகவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஜனநாயகம் நாடு கடத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட ஷேக் ஹசீனா, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சிறுபான்மையினர் வேட்டையாடப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
முகமது யூனுஸ் தலைமையிலான சட்டவிரோத ஆட்சியை அகற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
















