பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் விழா கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பார்வையிட்டார். வரும் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ள கண்காட்சியை பார்வையிட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்டத்தில் வந்தே மாதரம் பாடல் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தார். சுதந்திரத்திற்கு பிறகு வந்தே மாதரம் பாடல் புறக்கணிக்கப்பட்டதாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது மாணவர்கள் மத்தியில் வந்தே மாதரம் பாடல் பாடப்படுவதாகவும் கூறினார்.
இன்று பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் என கூறிய ஆளுநர், அவர் ஒன்றுபட்ட பாரதத்தை மட்டுமே விரும்பினார் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது சர்தார் வல்லபாய் படேலின் எண்ணத்தின் வெளிப்பாடு தான் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
















