மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கில், குடும்பத்தாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் காவலில் ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உடல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என ஆகாஷ் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக ஆகாஷ் வீட்டிற்குச் சென்ற சிபிசிஐடி போலீசார், அவரது பெற்றோரிடம் விரிவான விசாரணை நடத்தினர். சம்பவத்திற்கு முந்தைய நிகழ்வுகள், போலீசார் அழைத்துச் சென்ற விதம், ஆகாஷ் உடல்நிலை உட்பட முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள், தனித்தனியே கேள்விகளை எழுப்பி விளக்கம் பெற்றனர்.
ஆகாஷ் குடும்பத்தினர் அளித்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















