திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு, மாநில குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தனது கூட்டணி கட்சியினருக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகளை ஒதுக்கியதால் தங்களுக்கும் கூடுதலாக தொகுதி வேண்டும் என பல்வேறு கட்சிகள் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசரமாக செயற்குழு, மாநில குழு கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கடந்த முறை காட்டிலும் அதிக தொகுதிகளில் கேட்டு பெற வேண்டும் எனவும் தொகுதிகளை குறைத்து கொடுத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்றும் ஒரு சில மாநில நிர்வாகிகள் கருத்து தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு மதிமுக பொதுச்செயாலாளர் வைகோ திடீரென வருகை தந்தார். இது தொடர்பாக பேசிய அவர், தான் வருகை தந்தது அரசியல் ரீதியாக இல்லை எனவும், நட்பு ரீதியாகவே வந்ததாகவும் விளக்கம் அளித்தார்.
















