1999ல் பெங்களூருவில் நடந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனக் கூட்டத்தில் முதல் முதலாக இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டத்திற்கு விதை போடப்பட்டது . நிலாவைத் தொடுவதே அந்த திட்டத்தின் நோக்கம்.
பிறகு 2003ம் ஆண்டில் அந்த மாபெரும் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்ததோடு மட்டும் இல்லாமல் அன்றைய பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் 2003 ஆகஸ்ட் 15ம் தேதி நடைப்பெற்ற சுதந்திர தின விழா உரையில் நிலவுப் பயணத்தைக் குறிப்பிட்டு அந்தத் திட்டத்திற்கு சந்திரயான் 1 என அறிவித்தார் .
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மற்றும் இந்த திட்டத்தின் இயக்குனரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரின் தலைமையின் கீழ் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சரியாக திட்டமிட்டு தனது நகர்வுகளை மேற்கொண்டது இந்தியாவின் இஸ்ரோ. 9 ஆண்டுகள் கடும் உழைப்புக்குப் பின் இந்தத் திட்டம் செயலுருவம் பெற்றது.
சந்திரயான் 1 நிலவைச் சுற்றுவதோடு மட்டும் இல்லாமல் நிலாவைத் தொடுவதையும் தன் நோக்கமாக கொண்டிருந்தது.
2008 அக்டோபர் மாதம் 22ம் தேதி ஸ்ரீ ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான் 1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது .
இரண்டு ஆண்டுகள் நிலவின் சுற்றுப் பாதையில் பயணித்த இந்த சந்திரயான் எந்த நோக்கத்துக்காக அனுப்பப் பட்டதோ அதை கன கச்சிதமாக நிறைவேற்றியது.
இரண்டு ஆண்டுகளில் நிலவின் மேற்பரப்பு முழுவதும் ஆய்வு செய்து வந்த நிலையில் விண்ணில் செலுத்தப்பட்டு ஓராண்டுக்குப் பின்னர் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி சந்திரயான் 1 தன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்தியது . இதற்குள்ளாக ஏறத்தாழ 70000 நிழற்படங்களை அது எடுத்திருந்தது. இதில் அமெரிக்க விண்கலம் அப்போல்லோ- 15 தரை இறங்கிய இடமும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது .
சந்திரயான் 1 திட்டம் இந்தியாவிற்கு மிகப் பெரிய பெருமையைத் தேடித் தந்தது .
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூட நிலவில் இனி ஆய்வு செய்வதற்கு ஒன்றும் இல்லை. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று தன் பார்வையைச் செவ்வாய் கிரகத்தின் மீது திருப்பியது.
ஆனால் இந்தியாவின் சந்திரயான் 1 – நிலவின் மேற்பரப்பில் தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தது .
இதற்கு முன் நிலவுக்கு சென்ற எந்த விண்கலனும் இதனைக் கண்டப் பிடிக்க வில்லை. .
நிலவில் மேற்பரப்பில் கனிம மற்றும் வேதியல் பொருட்கள் இருப்பதையும் உறுதி செய்தது . இவை மட்டும் இன்றி தன் திட்டத்தின் பெரும்பாலான நோக்கங்களையும் சந்திரயான் 1 வென்றெடுத்தது .
இது தான் சந்திரயான் 1 திட்டத்தின் வெற்றி . ஆகவே தான் சந்திராயன் 1 திட்ட இயக்குனர் மயில் சாமி அண்ணாதுரை இந்தியாவின் நிலவு மனிதன் என்று போற்றப்படுகிறார்.
இந்த வெற்றிக்குப் பின் தொழில.நுட்ப ரீதியாக நிலவில் தரை இறங்குவதும் நிலவின் மேற்பரப்பில் ஒரு ரோவரை ஆய்வு செய்ய வைப்பதும் எனத் திட்டமிடப்பட்டதுதான் சந்திரயான்-2 .
இதன் படி ஆர்பிட்டர் , விக்ரம் லேண்டர் மற்றும் ப்ரக்யான் ரோவர் மற்றும் பல நவீன உபகரணங்களுடன் சந்திராயன் -2 , ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 2019ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி எஸ் எல் வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது .
நிலவின் சுற்றுப் பாதையில் நுழைந்த ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவில் தரை இறங்கும் போது தான் தன் கட்டுப்பாட்டை இழந்தது.
சந்திரயான் 2 இந்திய விண்வெளி நிறுவனத்திற்கு தோல்வி இல்லை – வெற்றியே, எப்படி எனில் நிலாவைக் குறித்து ஆராய்ச்சி செய்ய ,இது வரை பல்வேறு நாடுகள் பலமுறை முயற்சி செய்திருக்கின்றன . வெற்றியும் பெற்றிருக்கின்றன என்றாலும் எல்லாமும் நிலவின் வட துருவத்திற்குத் தான் சென்றுள்ளன. முதல் முறையாக நிலவின் தென் துருவத்திற்கு சந்திராயன் சென்றுள்ளதே பெரும் சாதனை .
இன்னும் சொல்லப் போனால் விக்ரம் லேண்டர் மற்றும் ப்ரக்யான் ரோவர் தான் பாதிப்பு அடைந்துள்ளதே தவிர ஆர்பிட்டர் இன்னமும் தன் சுற்றுப் பாதையில் தான் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது .
இந்நிலையில் சந்திரயான் 3 இந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி மதியம் 2.35 மணிக்கு ஜி எஸ் எல் வி மார்க் 3 மூலமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது . இந்த விண்கலம் 40 நாட்களுக்குப் பிறகு நிலவை சென்றைடையும். உந்து விசை தொகுதிக்குள்ளே லேண்டர் மற்றும் ரோவர் பொருத்தப்பட்டுள்ள நிலையில் சந்திரயான் 3 ஏவப்பட்டுள்ளது.
இது முதலில் பூமியின் வட்டப் பாதையில் மெல்ல மெல்ல சுற்றிவந்து வருகிற ஆகஸ்ட் 23 அல்லது 24 ம் தேதி தான் நிலவின் தென் துருவத்திற்குச் சென்றடையும். அதன் பிறகே விக்ரம் லேண்டரை தரை இறக்கும் .
தென் துருவத்தில் சென்று தரை இறங்கியதும் , லேண்டரை விட்டு ரோவர் பிரிந்து நிலவின் தரையில் உலாவத் தொடங்கும்.
தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கும் நிலவில் 15 நாள் பகல் 15 நாள் இரவு என்பதால் இந்த ரோவர் 14 நாட்கள் நிலவில் சுற்றி வந்து ஆய்வுகள் செய்யும் . 14 நாட்கள் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும் இது மேலும் நீட்டிக்கப்ப் படலாம் என்று தெரிகிறது .
சந்திரயான் 3 வெற்றி என்பதே உலகையே நம் பக்கம் திரும்பி வியந்துப் பார்க்க வைக்கிறது .
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சாதனைகள் இந்தியர்களான நம் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய பெருமையே.