நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் தற்போது நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழகம் மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறி, மறுப்புத் தெரிவித்து விட்டது. இதையடுத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும், அந்த மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்து விட்டார்.
இந்த நிலையில், சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் “எண்ணித் துணிக” என்கிற தலைப்பில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். அப்போது, சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை எழுந்து, “தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுகின்றனர். அதிக மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்கள். எனினும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே, தமிழக அரசின் நீட் தேர்வு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஆளுநர் ரவி, “நீட் தேர்வுக்குத் தடை கோருவதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன்.
மேலும், இந்த விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான் வெற்றிபெற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பள்ளியில் படிக்கும்போதே ஆழமாகக் கவனித்துப் படித்தால் நீட் தேர்வில் வெற்றிபெறலாம். அதோடு, ஒவ்வொரு முறையும் நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது மாணவர்களின் கற்றல் திறனையே கேள்விக்குறியாக்கிவிடும். அதேபோல், நீட் தேர்வுக் குழு அறிக்கையின்படி பார்த்தால், நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்” என்று உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்.