மத்திய அரசின் 2021-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது கடைசி விவசாயி’ திரைப்படத்திற்குஅறிவிக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக, இப்படம் வெளிவரும் முன்பே , நல்லதாண்டி உயிரிழந்துவிட்டார் என்பதால் விருதுக்கான “சிறப்பு பிரிவில் ” நலத்தாண்டி பெயர் சேர்க்கப்பட்டது.
காக்க முட்டை, ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் விவசாயிகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்தார். அதற்கு, கடைசி விவசாயி என்று பெயரிட்டார். மணிகண்டன் கடைசி விவசாயி என்ற படத்தை இயக்க 2016 ஆம் ஆண்டே தொடங்கினார்.
அதன் பின் படத்தை தயாரிப்பதற்காக தயாரிப்பாளரை தேடி அலைந்தார் மணிகண்டன். இறுதியில் அவரே இப்படத்தை தயாரிச்சார். இப்படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மணிகண்டன் அணுகினாராம். ஆனால் அதுவும் நடக்கவில்லையாம்.
இப்படத்தில் நடிகர்கள் நடித்தால் சரியாக இருக்காது என எண்ணியே மணிகண்டன் நிஜமான விவசாயிகளையே நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார். இதையடுத்து பல கிராமங்களை சுற்றி திரிந்தார் மணிகண்டன். கிட்டத்தட்ட நூறு கிராமங்களுக்கு மேல் மணிகண்டன் இப்படத்தின் லொகேஷனுக்காகவும், நடிகர்களை தேர்ந்தெடுப்பதற்காகவும் அலைந்தாா். இதற்கு மட்டும் மணிகண்டன் ஒரு வருடம் எடுத்துக்கொண்டார்.
ஒரு வழியா உசிலம்பட்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெருங்காமநல்லூர் கிராமம், அங்குதான் நல்லாண்டி தாத்தா கடைசி மூச்சு வரை வாழ்ந்திருக்கிறார்.
`எம்புட்டு பெரிய வேலையா இருந்தாலும் விவசாயத்துக்குதான் முக்கிய இடம் ‘அப்படீன்னு நெசமாவே விவசாயத்தில் ஆழ்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர், நல்லாண்டி தாத்தா. விவசாயத்தில் கிடைக்கப்பெறும் குறைவான ஊதியத்திலும். ஐந்து பிள்ளைகள், பேரன், பேத்தி என மகிழ்வுடன் வாழ்ந்திருக்கிறார். அது மட்டுமின்றி தாத்தாவுக்கு ஆடு,மாடு,கோழிகள் மீது அலாதி பிரியம். அவரின் இயல்வு வாழ்க்கையின் திரைவெளிச்சம்தான் ‘கடைசி விவசாயி’.
இது குறித்து அவரது மகன் “அவரை திரையில் பார்த்தப்போ கண்ணீர் வந்துருச்சு. எங்கப்பா எப்படி இருந்தாரோ, எப்படி வாழ்ந்தாரோ, அதை அப்படியே படம் புடிச்சிருக்காங்க. படத்துல வர்றமாரி அவருண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாரு. வேற எந்த விஷயத்துலயும் தலையிட மாட்டாரு. விவசாயம் செய்யுறது, ஊர் மந்தையில உக்காந்து மனுஷ மக்களைக் கவனிக்கிறது, வீட்டுக்கு வந்து உறங்குறது இதுதான் அவரோட தினசரி வேலை. விடியுறதுக்கு முன்னால வயலுக்குப் போயிடுவாரு, மறுபடி எட்டு மணிக்கு வந்து இன்னைக்கு என்னென்ன வேலை செய்யணும், யாரு யாரு கூட வரணும்னு சொல்லுவாரு. அதோட நாங்களும் போயி வேலை பார்ப்போம்.
அங்கேயே வேலை பார்த்து சாப்ட்டுப்புட்டு சாயங்காலம் வீட்டுக்கு வருவோம். அதனாலதான் ஊருல யாருக்காவது பஞ்சாயத்துல கொழப்பம்னா அப்பாகிட்டே வந்து கேப்பாக. யாருக்கும் சாதக பாதகமில்லாமல் சரியான தீர்வைச் சொல்லிடுவாரு. மத்தவங்க என்ன நினைப்பாகளோன்னு நேர்மை தவற மாட்டாரு.
சினிமாவுல நடிக்கக் கூப்புடுறாகன்னு வந்து சொன்னப்போ முதல்ல ஒத்துக்கல. அப்புறம் வெவசாய வேலைய முடிச்சுட்டுதான் வருவேன்னு சொல்லிட்டாரு. தினமும் சூட்டிங்குக்குப் போவாரு, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூவா கொடுப்பாங்க. அதை வாங்கிட்டு வந்து வீட்டுல கொடுப்பாரு. பேரன், பேத்திகளோட விளையாடுவாரு. இப்படி ஓடியாடி இளவட்டம் மாதிரி இருந்தவரு, நோய் நொடின்னு படுத்ததில்லை. திடீர்னு எங்களை விட்டுப் போவாருன்னு நெனைக்கல. இந்தப் படம் வரும்போது அவர் இல்லாதது ரொம்ப வருத்தமாயிருக்கு” எனத் தொிவித்தார்.