சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் சீன வம்சாவளியைச் சேர்ந்த போட்டியாளர்கள் இருவரையும் வீழ்த்தி, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற்றார்.
சிங்கப்பூர் அதிபராக இருக்கும் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அவர், இனிமேல் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். இதையடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலை கடந்த 11-ம் தேதி பிரதமர் லீ சியென் லூங் அறிவித்தார். அதன்படி, தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. இதில், 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் (66), சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்களான இங் கொக் சொங் (76) மற்றும் டான் கின் லியான் (75) ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இவர்கள் 3 பேரும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனால், அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தல் பிரசாரம் ஆகஸ்ட் 30-ம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இத்தேர்தலில் முதல்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 10 நகரங்களில் இருந்து சிங்கப்பூர் மக்கள் வாக்களித்தனர். சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்தனர்.
இதன் பிறகு வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதலில் நடந்த மாதிரி வாக்கெடுப்பில், தர்மன் சண்முகரத்தினம் 70 சதவிகித வாக்குகள் பெற்றி முன்னிலையில் இருந்தார். ஆகவே, அவர் வெற்றிபெறுவது உறுதி என்பது முடிவானது. அதன்படியே, தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 70.4 சதவிகித வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றிருக்கிறார். சிங்கப்பூர் அதிபராக தமிழர் ஒருவர் வெற்றி பெற்றதை அந்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இங் கொக் சொங்கிற்கு 15.72% வாக்குகளும், டான் கின் லியானுக்கு 13.88% வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, செப்டம்பர் 14-ம் தேதி சிங்கப்பூர் அதிபராக தமிழர் தர்மன் சண்முகரத்தினம் பதவியேற்கிறார்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை, 1959-ம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்தது. இதன் அரசியலமைப்பு இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் முறையைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், சுதந்திரத்திற்குப் பிறகு, அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவில்லை. அதிபர் பதவியும் உருவாக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் மூலம் அதிபர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். மேலும், அப்பதவி “யாங் டி பெர்துவா நெகாரா” என்று அழைக்கப்பட்டது. சிங்கப்பூரில் முதன் முதலில் இப்பதவியை வகித்தவர் யூசுப் இசாக். இவர்தான் சிங்கப்பூரின் முதல் அதிபராக கருதப்படுகிறார். இதன் பிறகு, 1991-ம் ஆண்டு பொதுமக்களே அதிபரை தேர்ந்தெடுக்கும் வகையில், அரசியல் சாசனங்கள் திருத்தி அமைக்கப்பட்டன.
இதையடுத்து, 1993 முதல் சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. அந்த வகையில், ஒங் தெங் சியோங் என்பவர் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல் அதிபரானார். இதன் பின்னர், இதுவரை 5 முறை அதிபர் தேர்தல் நடைபெற்றிருக்கிறது. தற்போது 6-வது தேர்தல் நடந்திருக்கிறது. இத்தேர்தலில்தான் தர்மன் சண்முகரத்தினம் அதிபராகி இருக்கிறார். இவர் சிங்கப்பூர் நாட்டின் 9-வது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், அதிபர் பதவியை அலங்கரிக்கும் 2-வது தமிழர் என்கிற பெருமையையும் தர்மன் சண்முகரத்தினம் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு, 1999-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை எஸ்.ஆர்.நாதன் என்கிற செல்லப்பன் ராமநாதன் என்ற தமிழர் அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரைப் பொறுத்தவரை, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். 13.9 சதவிகிதம் பேர் மலாய்காரர்கள். மீதமுள்ள 11.1 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்கள். ஆகவே, சிங்கப்பூரில் அதிபர் மற்றும் பிரதமராக இருந்தவர்களில் அதிகம் பேர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்தான். 2-வது பெரும்பான்மை சமூகமான மலாய்காரர்கள் 1970-ம் ஆண்டுக்குப் பிறகு, அதிபர் தேர்தலை அலங்கரிக்காததால், 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மலாய் மக்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ஹலிமா யாகூப் மட்டுமே மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக, மற்றவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு ஹலிமா யாகூப் அதிபராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.