உலகம் முழுவதும் திரைப்படத் துறையில் நடிப்பு நீங்கலாக, பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. இதில் ஹாலிவுட்டும் விதிவிலக்கு அல்ல.
அப்படிப்பட்ட திரைப்படத் துறையில் 100 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்துப் புதிய சரித்திரத்தை எழுதியிருக்கிறார் இயக்குனர் கிரிட்டா கோவிக். கடந்த மாதம் வெளியான பார்பி திரைப்படத்தின் மூலம் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் இவர்.
கொரொனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்காக ‘பார்பி’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிரிட்டாவுக்கு வந்தது. பிறகு கணவருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக படத்தை இயக்கினார். வார்னர் பிரிதர்ஸின் நூற்றாண்டுக் கால வரலாற்றில், பெரும் வசூலை வாரிக் குவித்த படமாக பார்பி அமைந்துவிட்டது.
பார்பி லேண்டில் வசிக்கும் பெண்கள் அனைவருமே வெவ்வேறு விதமான பார்பிகள்தாம். பார்பியும் கென்னும் பிங்க் வண்ணமாய உலகிலிருந்து மனிதர்கள் வசிக்கும் நிஜ உலகத்துக்கு வருகிறார்கள். அங்கே அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களே கதை. கிரெட்டா தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே பார்பியிலும் பெண்ணியச் சிந்தனைகளையும் நகைச்சுவையையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
பார்பி வெளியாவதற்கு முன்பே எதிர்ப்புகளும் வலுக்க ஆரம்பித்துவிட்டன. இந்த திரைப்படம் சீன கம்யூனிசக் கொள்கையை விதைக்கிறது என்று வலதுசாரிகள் தாக்கினார்கள். பெண்ணியச் சிந்தனைகளை வலுவாகச் சொன்னதால், சில நாடுகள் திரைப்படத்துக்குத் தடைவிதித்தன. பெண் இயக்கிய திரைப்படம், பெண்களால் பெண்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றெல்லாம் பாலினப் பாகுபாடுகள் நிறைந்த கருத்துக்களையும் கிரிட்டா எதிர்கொண்டார்.
இதை குறித்து அவர் ” நான் நிஜ வாழ்க்கையிலிருந்துதான் திரைக் கதையை எழுத ஆரம்பிப்பேன். எதிர்ப்புகள் குறித்து நான் கவலைப்படவில்லை. வெற்றி கிடைக்கும்போது எதிர்ப்புகள் மாயமாகிவிடும்” என்று நிதானமாகச் சொன்னார் கிரிட்டா.
அவர் சொன்னது போலவே, சுமார் 14 கோடி அமெரிக்கா டாலர்கள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பார்பி திரைப்படம், உலகம் முழுவதும் 127.9 கோடி அமெரிக்கா டாலர்களை வசூலித்து, புதிய சரித்திரத்தை எழுதியிருக்கிறது.