கருணாநிதி குடும்பத்திலேயே பெண்களுக்கு சமூக நீதியை நிலைநாட்ட முடியாதவர்கள், சனாதனத்தின் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள் என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது.
வீட்டுப் படிக்கட்டை தாண்டக் கூடாது என சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தியது. கொசு, டெங்கு, மலேரியா, கரோனா காய்ச்சல் போன்ற வற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அதுபோல ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம்” என்று பேசியிருக்கிறார். சனாதன தர்மமே இந்து மதம் என்றழைக்கப்படுகிறது.
சனாதனம் என்ற பெயர் மட்டுமல்ல, திராவிடம், கருணாநிதி, உதயசூரியன், உதயநிதி எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள்தான். திமுகதான் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. ஆனால், கட்டற்ற சுதந்திரம் கொண்ட சனாதன தர்மமான இந்து மதத்தை சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது என்கிறார் உதயநிதி.
வீட்டு படிக்கட்டைக் கூட தாண்ட முடியாமல் பெண்களை அடிமையாக வைத்திருந்தது சனாதனம் என்கிறார் உதயநிதி.
திமுகவுக்கு வாரிசு அரசியலில் கூட ஆணாதிக்கம் தான். கருணாநிதியின் அரசியல் வாரிசான ஸ்டாலினுக்கு மகள் இருந்தும், மகன் உதய நிதியைத் தான் அரசியல் வாரிசாக்கியுள்ளார்.
குடும்பத்திலேயே பெண்களுக்கு சமூக நீதியை நிலைநாட்ட முடியாதவர்கள், சனாதனத்தின் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். திமுகவில் பெண்ணுரிமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது சகோதரி கனிமொழியின் மனசாட்சிக்குத் தெரியும். உலகெங்கும் 110 கோடிக்கும் அதிகமான மக்கள் பின்பற்றக்கூடிய ஒரு மதத்தை, கொசு, டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தி இருப்பதை ஏற்க முடியாது.
ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்திய இந்த பேச்சுக்காக, உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”. எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.