இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்தத் தொடரில் இதுவரை பாகிஸ்தான் அணி மட்டும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வங்காள தேசம் அணி இந்த தொடரில் ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில், களமிறங்கியது. இந்த போட்டி பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்நிலையில், வங்காள தேச அணியின் துவக்க ஆட்டக்காரர்கள், முகமது நைம் மற்றும் மெஹதி ஹைசன் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் 10 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் களமிறங்கிய ஹிரிதாய் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஷாண்டோ தொடக்க ஆட்டக்காரர் ஹைசனுடன் இணைந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டார். இதனால், வங்காள தேசத்தின் ரன்ரேட் சீராக உயர்ந்தது. இருவரும் அடுத்தது, அரைசதம் விளாசி சதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தனர். இவர்களின் விக்கெட்டை கைப்பற்ற ஆஃப்கானிஸ்தான் அணி எடுத்த முயற்சிகள் ஒன்று கூட கைகொடுக்கவில்லை. சிறப்பாக விளையாடி வந்த இவர்கள் கூட்டணி மூன்றாவது விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்தனர்.
அதன் பின்னர் வந்த வங்காள தேச வீரர்கள் முஸ்ஃபிகிர் ரஹிம் மற்றும் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தாலும், இருவரும் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டதால், வங்காளதேச அணியின் ரன்ரேட் குறையாமல் இருந்தது. அதன் பின்னர் வந்த ஷமிம் கிடைத்த பந்துகளில் அதிரடி காட்ட, இறுதியில் வங்காளதேச அணி 300 ரன்களைக் கடந்தது.
50 ஓவர்களில் வங்காள தேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் சார்பில் முஜீப் மற்றும் குல்பதின் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 335 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிப் பிடிக்கும் நோக்கில் ஆடத்தை துவங்கியது. தொடக்க ஆட்டகாரர்களில் குர்பாஸ் தனது விக்கெட்டை ஒரு ரன் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்ரேட் சீராக இருந்தது. 40வது ஓவரின் கடைசி பந்து முதல் இந்த போட்டி வங்களாதேசத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. அதன் பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடிக்கு ஆளானது. இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 44வது ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், வங்களாதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி மட்டும் 51 ரன்கள் சேர்த்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் வங்காள தேச அணி தனது சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பினை தக்கவைத்துள்ளது.