சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ கொப்புடைய நாயகியம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் மையப்பகுதியில் பக்தர்களின் காவல் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ கொப்புடைய நாயகியம்மன் கோயில் அமைந்துள்ளது.
மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை ஒட்டி கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு கணபதி பூஜை, கோபூஜை, லஷ்மி ஹோமம், விசேஷ திரவிய ஹோமம், உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் ஓம் சக்தி கோஷங்கள் விண்ணைப் பிளக்க மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுர விமானக் கலசங்களுக்குச் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதன் பின் அருள்மிகு ஸ்ரீ கொப்புடைய நாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.