ஆசான்களுக்கெல்லாம் ஆசானாகத் திகழ்ந்த டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்த தினம், ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் பணியை அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்னும் வாசகத்திற்கு ஏற்ப டாக்டர். ராதாகிருஷ்ணன் தனது வாழ்நாள் முழுவதையும் கல்விக்காகவும், இளைஞர்களின் நலனுக்காகவும் அர்பணித்தார்.
டாக்டர். ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் வீராசாமி தாயார் சீதம்மா. பெற்றோர் ஏழ்மையான நிலையிலிருந்ததால், உதவித்தொகை மூலம் தான் படித்தார்.
ஆசிரியர் பணியில் நாட்டம் கொண்ட ராதாகிருஷ்ணன் சென்னை மாநிலக் கல்லூரி, மைசூர் பல்கலைக் கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகங்களில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
இவருடைய கற்பிக்கும் திறன் மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த ஆசிரியராக திகழ்ந்தார்.
1923-ல் ராதாகிருஷ்ணன் இந்தியத் தத்துவம் என்ற படைப்பை வெளியிடப்பட்டார். இது இவருடைய தலைசிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.
சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அளப்பறியக் கல்விப் பணிகளை மேற்கொண்டதாதற்காக நாட்டின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . தொடர்ந்து, இரண்டு முறை குடியரசுத் துணைத் தலைவராக பணியாற்றிய பின், 1962-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1975-ஆம் ஆண்டு தனது 87 வயதில் உயிர் நீத்தார். ஆசிரியர்களுக்கெல்லாம் தந்தையாகவும், கல்வி சுடராகவும் விளங்கிய ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.