சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலினை ஜூனியர் அரசியல்வாதி என்று குறிப்பிட்டு குட்டு வைத்திருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் இடம் உண்டு என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச) நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் ஆகியவற்றைப் போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று கூறினார். இவரது பேச்சு நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் உதயநிதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உதயநிதிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “நான் தமிழ் மக்களையும், ஒட்டுமொத்த தென் மாநில மக்களையும், மு.க. ஸ்டாலினையும் மிகவும் மதிக்கிறேன். ஆனால், அவர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் நான் வைக்கிறேன். இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது. ஏராளமான மதங்களுக்கும், ஜாதிகளுக்கும் இந்தியாவில் இடம் இருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஜனநாயக நாடு. அதனால், அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் சனாதன தர்மத்திற்கு மதிப்புக் கொடுக்கிறேன்.
சனாதனத்தில் கடவுளுக்கு சேவை செய்யும் எத்தனையோ புரோகிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன். பெரும்பான்மை மக்களோ, சிறுபான்மை மக்களோ அவர்களின் உணர்வுகள் புண்படும்படி நாம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உதயநிதி ஒரு ஜூனியர் அரசியல்வாதியாக இருக்கிறார். அவருக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். அவர் பேசியதை நானும் கேள்விப்பட்டேன். ஆனால், எந்த அர்த்தத்தில் அவர் அப்படி பேசினார் எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், அதுபோன்று அவர் பேசியிருக்கக் கூடாது. அனைத்து மதங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து” என்று கூறியிருக்கிறார்.