“இந்தியா” என்கிற பெயரை வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் “பாரத்” என்று மாற்றப்போவதாக வெளியாகும் தகவல் வெறும் வதந்தி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் முனைப்புக் காட்டி வருகிறது. இதற்காக 28 மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. இக்கட்சித் தலைவர்கள் பெங்களூருவில் நடந்த 2-வது கூட்டத்தில் இக்கூட்டணிக்கு I.N.D.I.A. என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். இந்தியா என்கிற நாட்டின் பெயரை எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு சூட்டி இருப்பதால், இந்தியா என்கிற பெயரை பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மத்திய அரசு தவிர்த்து வருகிறது. அந்த வகையில், “இந்தியா” என்று தொடங்கும் குற்றவியல் சட்டங்களை “பாரதிய” என்று மாற்றும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.
இந்த நிலையில், வரும் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு டெல்லியில் நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள் வருகை தருகிறார்கள். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 9-ம் இரவு விருந்து கொடுக்கிறார். இதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருக்கிரது.
இந்த அழைப்பிதழில், “President of India” என்பதற்கு பதிலாக “President of Bharat” என்று அச்சிடப்பட்டிருக்கிறது. அதேபோல, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டிலும், கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று இரவு செல்கிறார். இது தொடர்பான அழைப்பிதழிலும் “Prime minister of India” என்பதற்கு பதிலாக “Prime minister of Bharat” என்றும் அச்சிடப்பட்டிருந்தது. எனவே, இந்தியா என்கிற பெயரை வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பாரத் என்று பெயர் மாற்றம் செய்ய பா.ஜ.க. திட்டமிட்டிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து, பெயர் மாற்றம் என்பது வெறும் வதந்தி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “பெயர் மாற்றம் குறித்த பேச்சு வெறும் வதந்தி. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் அப்படி எதுவும் நடக்காது. நான் இந்திய அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருக்கிறேன். இந்தியா என்ற வார்த்தையை யார் கைவிட்டது? யாரும் அதை கைவிடவில்லை. G20 பிராண்டிங் லோகோவில் இந்தியா மற்றும் பாரத் என்று எழுதப்பட்டுள்ளன.
பிறகு ஏன் எந்த காரணமும் இல்லாமல் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற வதந்திகளை பரப்புவது யார்? பாரத் என்ற வார்த்தையால் யாருக்கு என்ன பிரச்சனை? அல்லது பாரத் என்ற வார்த்தையில் என்ன பிரச்சனை? இது அவரது மனநிலையை காட்டுகிறது. அவருக்கு இந்தியா மீது எதிர்ப்பு இருக்கிறது. அதனால் தான் அவர் வெளிநாடு செல்லும்போது, அங்கு இந்தியாவை விமர்சிக்கிறார். அதேபோல, இந்தியாவில் இருக்கும்போது பாரதத்தின் பெயரைச் சொல்வதில் அவருக்கு ஆட்சேபனை இருக்கிறது” என்று ராகுல் காந்தியையும் விமர்சித்திருக்கிறார்.