காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் “பாரத்” என்கிற சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் நிலையில், அது நமது அரசியல் அமைப்பிலேயே இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஜி20 உச்சி மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 9-ம் தேதி இரவு விருந்து அளிக்கிறார். இது தொடர்பான அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடாமல் ‘பாரத குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. இந்தியா என்கிற பெயரை பாரத் என்று மாற்றப்போவதாக மக்களை திசை திருப்பி வருகின்றன.
இந்த சூழலில், இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “இந்தியாதான் பாரத். அது நமது அரசியலமைப்பிலேயே உள்ளது. இதனை அனைவரும் வாசிக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் பாரதம் என்று கூறும்போது அதில் ஒரு பொருள் மற்றும் அர்த்தம் இருக்கிறது. அதனுடன் ஒரு புரிதலும், உறவும் உருவாகும். இது நமது அரசியலமைப்பிலும் பிரதிபலிப்பதாக நான் கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.