ஒரே நாடு, ஒரே தேர்தலை, அன்றைய திமுக தலைவர் கருணாநிதியே வலியுறுத்தியுள்ளார் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண், என் மக்கள் 2-ம் கட்ட நடை பயணத்தை, , தென்காசியில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக, கடையநல்லூரில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
அப்போது, பேசிய அவர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீடு புகுந்து 4 பேரை, சமூக விரோதிகள் வெட்டிப்படுகொலை செய்துள்ளனர். அதேபோல, திருநெல்வேலியில், பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. எல்லா இடத்திலும், தாராளமாகக் கிடைக்கிறது. பல இடங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால், தெருவுக்குத் தெரு, டாஸ்மாக் வைத்து, சாராயத்தை திமுக விற்பனை செய்து வருகிறது.
உதயநிதி என்பவர் ஒரு கத்துக்குட்டி. அவருக்குப் படிப்பறிவும் இல்லை, சொந்த அறிவும் இல்லை. உங்கள் தாத்தா கருணாநிதி, அந்த காலத்திலேயே, சனாதனம் குறித்துப் பேசி தோல்வி அடைந்தவர். வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் உங்களுக்கு உண்மை தெரியும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் தற்போதைய தேவைகளில் முக்கியமானது. தேர்தல் என்று வந்துவிட்டாலே, மாவட்ட ஆட்சியர் முதல் சாதாரணக் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருமே இரவு – பகல் பாராமல் வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த வேலையை நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம். இதை வலியுறுத்தித்தான், கடந்த 1971 -ம் ஆண்டு, ஒரே நாடு, ஒரே தேர்தல் நாட்டிற்குத் தேவை என, கருணாநிதியே குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, மறைந்த கருணாநிதி தனது சுயசரிதையான நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார். இதை முதல்வரும், அவரது மகனும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.