கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதில், ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தற்போது, இந்த தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு விவரங்களைத் தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவால், அவர் போட்டியிட்ட புதுப்பள்ளி தொகுதி காலியானதானது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மற்ற தொகுதிகளில் உள்ள உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது. இதனால், 6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டது.
இதனிடையே, இந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும், செப்டம்பர் 5-ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் செப்டம்பர் 8-ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில், திரிபுரா மாநிலத்தில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், பாஜக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும், ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்களித்த அனைவரது கை விரல்களிலும், அழியா மை வைக்கப்பட்டது. பிரச்சனை மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவான வாக்குகள் அனைத்தும், மூடி சீலிடப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று பதிவான வாக்குப் பதிவு சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேசம் கோசி தொகுதியில் 50.30 சதவீதமும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் டும்ரி தொகுதியில் 64.84 சதவீதமும், உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ் தொகுதியில் 55.44 சதவீதமும், மேற்கு வங்கம் மாநிலம் துப்குரி தொகுதியில் 76 சதவீதமும், கேளராவில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் 73 சதவீதமும், திரிபுரா மாநிலத்தில் உள்ள தன்புர் மற்றும் போக்ஸாநகர் தொகுதியில் 76 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.