இந்தோனேசியா (Indonesia) நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் (Jakarta) 20-வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட ஆசியான் கூட்டமைப்பின் 10 உறுப்பு நாடுகளுடன் விவாதம் நடத்தச் சிறப்பு அழைப்பாளர்களான இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய 8 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்தி மோடி கலந்து கொண்டு, கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தோனேசியா சென்றுள்ளார். அவர் இன்று இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவை (Sergey Lavrov) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மேலும், ஜி20 மாநாட்டில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோ (Sergey Lavrov) பங்கேற்க உள்ளார். ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டத்திலான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.