விழாவின் 10-வது நாளான இன்று கொடியிறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதப் பிரம்மோற்சவ விழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவதும் வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜப் பெருமாளுக்குப் பால், தேன், நெய், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், சப்பரம், பவளக்கால் சப்பரம், அன்னம், கருடன், குதிரை, அனுமாா், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதற்கிடையில், வெள்ளிக்கிழமை திருக்கல்யாணமும், சனிக்கிழமை பாரிவேட்டையும் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலையில் பல்வேறு சிறப்புப் பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா.. கோவிந்தா.. என்ற சரணக் கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தது.
விழாவின் 10வது நாளான இன்று கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், விழாவின் 11-வது நாளான நாளை (செவ்வாய்க் கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.