மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலின் உப கோவிலான வெள்ளீஸ்வரர் கோவில், தொண்டை மண்டல நவகிரகத் தலங்களில் சுக்கிரன் பரிகாரத் தலமாக உள்ளது.
கோவில் நிர்வாகம் சார்பில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 70 லட்சம் மதிப்பீட்டில் கோயில் புனரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டது.
வெள்ளீஸ்வரர் கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, கும்பாபிஷேக விழா நடத்தக் கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கக் கோவில் விமானக் கலசங்களுக்குப் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதன் பின் மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.