75-வது சுந்திர தினத்தையொட்டி, சென்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், பல்வேறு சிறப்புகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குப், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2020-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய அதிநவீன வசதிகளுடன் கூடிய நாடாளுமன்றக் கட்டிடத்தை, 2023-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி, பாரத பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கடந்த மழைக்காலக் கூட்டத் தொடர், ஜூலை மாதம் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடர் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பழைய கட்டிடத்திலேயே நடைபெற்றது.
வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்தச் சிறப்பு கூட்டம் எங்கு நடைபெறும் ? என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் 18-ம் தேதி அன்று பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திலேயே கூட்டம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18-ம் தேதி மதியம் 12.39 மணி முதலே தொடங்குகிறது. அடுத்த நாள், அதாவது 19-ம் தேதி இரவு 8.43 மணி வரை விநாயகர் சதுர்த்தி கடைபிடிக்கப்படுகிறது.
இதனால், 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் அன்றைய நன்நாளில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், சிறப்பு கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.